திருவள்ளூரில் பழவேற்காடு மீனவ இன மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

பாதுகாப்பு வழங்கக்கோரி பழவேற்காடு மீனவ இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ரேஷன், ஆதார் கார்டுகளை வீசி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-03 13:03 GMT

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், பழவேற்காடு ஆண்டிகுப்பம் பகுதியில் இருந்து நேற்று திரளான மீனவ இன மக்கள் குடும்பத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் கேட்டபோது போலீசாரிடம் மீனவ மக்கள் கூறியதாவது:-

பழவேற்காடு ஆண்டிகுப்பம் பகுதியில் 37 மீனவ இன குடும்பத்தை சேர்ந்த நாங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவ தரப்பினர் எங்களை அடிக்கடி தாக்கி மீன்பிடிக்க விடாமல் தடுத்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக கடலுக்குச் சென்று தொழில் செய்ய முடியாமல் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.

ரேஷன் அட்டையை வீசினர்

இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.டி.ஓ. தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு காணப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

அப்போது வந்திருந்த மீனவ இன மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தாங்கள் கொண்டு வந்த ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இருந்த சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து அவர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்