நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய இன்று மறைமுக தேர்தல்
நகராட்சி, பேரூராட்சிகளில் இன்று தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
பொள்ளாச்சி
நகராட்சி, பேரூராட்சிகளில் இன்று தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
தி.மு.க. கைப்பற்றியது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 151 பேர் போட்டியிட்டனர். கடந்த 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவில் தி.மு.க. 30 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும், ம.தி.மு.க. ஒரு இடத்தையும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இதற்கிடையில் நேற்று முன்தினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையில் தலைவர், துணை தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி நிலவியது.
மறைமுக தேர்தல்
இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. துணை தலைவர் பதவிக்கு பகல் 2.30 மணிக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. தலைவர் பதவிக்கு சியாமளா நவநீதகிருஷ்ணனை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மறைமுக தேர்தலையொட்டி நகராட்சி மன்ற கூட்டரங்கில் இருக்கைகள், மைக் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இதேபோன்று சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, ஜமீன்ஊத்துக்குளி, சமத்தூர், கோட்டூர், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் பதவிக்கு அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேட்பாளர்கள் விவரம்
தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொள்ளாச்சி நகராட்சி சியாமளா நவநீதகிருஷ்ணனும், வால்பாறை நகராட்சிக்கு காமாட்சி கணேசனும் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு கதிர்வேல், பெரிய நெகமத்திற்கு ஆர்த்தி சபரி, ஆனைமலை கலைசெல்வி, ஒடையகுளம் ரேணுகாதேவி, கோட்டூர் ராமகிருஷ்ணன், வேட்டைக்காரன்புதூர் ஸ்ரீதேவி, சூளேஸ்வரன்பட்டி ராகிணி, ஜமீன்ஊத்துக்குளி அகத்தூர்சாமி, சமத்தூர் காளிமுத்து ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க. கைப்பற்றி உள்ளதால், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வேட்பாளர்களே தலைவர் பதவியை பிடிக்க வாய்ப்பு உள்ளது.