சேலம் மாவட்டத்தில் 31 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
சேலம் மாவட்டத்தில் 31 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அந்தந்த அலுவலக செயல் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 31 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அந்தந்த அலுவலக செயல் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பி.என்.பட்டி- வீரக்கல்புதூர்
சேலம் மாவட்டம் பி.என்.பட்டி பேரூராட்சி, வீரக்கல்புதூர் பேரூராட்சி தேர்தலில் 5-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தெய்வானைஸ்ரீ உள்பட வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பி.என்.பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் வனிதா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோன்று வீரக்கல்புதூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு செயல் அலுவலர் நந்தகுமார் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர் செயலாளர் அல்லிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கெங்கவல்லி- கருப்பூர்
கெங்கவல்லி பேரூராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 1-வது வார்டு உறுப்பினர் லோகாம்பாள் உள்பட 15 உறுப்பினர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு செயல் அலுவலர் ராணி பதவி பிரமாணம் செய்து வைத்தார். லோகாம்பாளுக்கு பேரூர் செயலாளர் முருகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கருப்பூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு செயல் அலுவலர் நீலாதேவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஆட்டையாம்பட்டி- மேச்சேரி
ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களுக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அருள்மொழி, யுதா கேசனி ஆகியோர் முன்னிலையில் செயல் அலுவலர் குணாளன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றுக்கொண்டவர்களுக்கு அந்தந்த கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேச்சேரி பேரூராட்சியில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தலா ஒருவரும், பா.ம.க. மற்றும் சுயேச்சைகள் தலா 3 பேர் என 18 கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நங்கவள்ளி- ஜலகண்டாபுரம்
இதேபோல நங்கவள்ளியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேரும், அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் தலா 2 பேரும், பா.ஜனதா கவுன்சிலர் ஒருவரும், சுயேச்சைகள் 4 பேரும் என 15 கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். செயல் அலுவலர் மோகனகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேரும், பா.ஜனதா கவுன்சிலர் ஒருவரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு செயல் அலுவலர் குணசேகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வனவாசி- இளம்பிள்ளை
வனவாசி பேரூராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 8 பேரும், தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும், சுயேச்சை ஒருவரும் நேற்று பதவி ஏறறுக்கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஷஹதாஜ் பேகம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இளம்பிள்ளை பேரூராட்சியில் 11 தி.மு.க. கவுன்சிலர்களும், 2 அ.தி.மு.க. கவுன்சிலர்களும், பா.ம.க. மற்றும் சுயேச்சை ஒருவர் என 15 கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் அன்புச்செல்வி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பேளூர்- வாழப்பாடி
பேளூர் முதல்நிலை பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான ராமு புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வாழப்பாடி தேர்வுநிலை பேரூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 15 வார்டு உறுப்பினர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான கணேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 11-வது வார்டு உறுப்பினர் சத்தியா, பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட போது கலைஞர் அறிய என்று கூறி பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அரங்கில் பலத்த கரவொலி கேட்டது. நிகழ்ச்சியில் வாழப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தி, அ.தி.மு.க. ஒன்றிய எஸ்.சதீஷ்குமார், பா.ம.க. மாவட்ட செயலாளர் விஜயராஜா, மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேவூர்- கிரீப்பட்டி
தேவூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களுக்கும் செயல் அலுவலர் ரேவதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக சங்ககிரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜேஷ் தலைமையில் தேவூர் நகர செயலாளர் முருகன் முன்னிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் ஊர்வலமாக வந்து பதவி ஏற்றுக்கொண்டனர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேவூர் நகர செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பதவி ஏற்றுக்கொண்டனர்
கீரிப்பட்டி பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். செயல் அலுவலர் சையது இப்ராகீம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வீரகனூர்- அயோத்தியாப்பட்டணம்
வீரகனூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15 பேருக்கும், செயல் அலுவலர் ஜேம்ஸ் டி.சாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
செந்தாரப்பட்டி பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களுக்கும் செயல் அலுவலர் கிருஷ்ணசாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சங்ககிரி பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு செயல் அலுவலர் சுலைமான் சேட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பூலாம்பட்டி- பனமரத்துப்பட்டி
பூலாம்பட்டி பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 5 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். செயல் அலுவலர் பழனிசாமி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கொங்கணாபுரத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு செயல் அலுவலர் தாமோதரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சிவராஜ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அரசிராமணி பேரூராட்சியில் 15 கவுன்சிலர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிமுத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமையிலும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகர செயலாளர் காளியப்பன் தலைமையிலும், பா.ம.க. கவுன்சிலர் மாரியப்பன் நகர செயலாளர் சேட்டு தலைமையிலும் பதவி ஏற்றுக்கொண்டார்,
கன்னங்குறிச்சி
கன்னங்குறிச்சி பேரூராட்சியில் வெற்றி பெற்ற 15 கவுன்சிலர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு செயல் அலுவலர் லாரன்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.