6 நகராட்சிகளிலும் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் புதிதாக வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2022-03-02 21:59 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் புதிதாக வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
மேட்டூர்- ஆத்தூர்
மேட்டூர் நகராட்சியில் வெற்றி பெற்ற 30 உறுப்பினர்களும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கான பதவி ஏற்பு விழா மேட்டூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. 12-வது வார்டு கவுன்சிலராக தி.மு.க. நகர செயலாளர் காசி விஸ்வநாதன் உள்பட 30 கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். 30 உறுப்பினர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் நகரசபை தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் நகராட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் 24 பேரும், அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், சுயேச்சைகள் 2 பேரும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளில் தலா ஒருவரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. கவுன்சிலர் கவிதா ஸ்ரீராம் உள்பட 33 பேரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் 33 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 19 பேரை ஒரு வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
நரசிங்கபுரம்- எடப்பாடி
நரசிங்கபுரம் நகரசபையில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. சார்பில் 8 பேரும், அ.தி.மு.க. சார்பில் 6 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 2 பேரும், சுேயச்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 18 பேரில் 10 பேர் பெண் கவுன்சிலர்கள் ஆவர். இவர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகரசபை ஆணையாளர் மகேசுவரி, கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
எடப்பாடி நகராட்சியில்  16 இடங்களில் தி.மு.க.வும், 13 இடங்களில் அ.தி.மு.க.வும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் சேகர் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் முருகன், தி.மு.க. நகர செயலாளர் பாஷா, அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாரமங்கலம்- இடங்கணசாலை
தாரமங்கலம் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர்கள் 12 பேரும், அ.தி.மு.க., பா.ம.க. உறுப்பினர்கள் தலா 4 பேரும், சுயேச்சைகள் 7 பேரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் மங்கையர்கரசன் கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இடங்கணசாலை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும், பா.ம.க. கவுன்சிலர்கள் 8 பேரும், அ.தி.மு.க., சுயேச்சைகள் தலா 2 பேரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் செய்திகள்