பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை
தக்கலை அருகே பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மாணவர்
தக்கலை அருகே திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன், தொழிலாளி. இவருடைய மனைவி ஸ்ரீமதி, வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சுசாந்த் (வயது 19), நிஷாந்த் (17) என்ற 2 மகன்கள் இருந்தனர். நிஷாந்த் பார்வதிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் படித்த கல்லூரிக்கு சக மாணவர்கள் ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் வருவார்கள். இதனை பார்த்த நிஷாந்த்துக்கும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
தூக்கில் பிணம்
இதனால் பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கூறியுள்ளார். ஆனால் பெற்றோர் வாங்கி தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த நிஷாந்த் கல்லூரிக்கு சரிவர செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை அவரது அண்ணன் சுசாந்த் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. உடனே அவர் வெகுநேரமாக கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து பார்த்த போது அங்கு நிஷாந்த் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுசாந்த் கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
சோகம்
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராத விரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.