சலூன் கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு; ஊர்க்காவல் படையினர் உள்பட 5 பேர் கைது

பெங்களூருவில் சலூன் கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போலீசார் என எனக்கூறி கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2022-03-02 20:52 GMT
பெங்களூரு: பெங்களூருவில் சலூன் கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போலீசார் என எனக்கூறி கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.

ரூ.1.60 லட்சம் பறிப்பு

பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜெயந்திநகரில் ஒரு நவீன சலூன் உள்ளது. அந்த கடைக்கு கடந்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி 5 பேர் சென்றார்கள். அவர்களில் 4 பேர் தங்களை போலீஸ்காரர்கள் எனவும், மற்றொருவர் பத்திரிகையாளர் எனவும் கூறிக் கொண்டனர். பின்னர் சலூன் கடையில் மசாஜ் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. கடை மீதும், உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கொடுக்கும்படி கேட்டு மிரட்டி உள்ளனர்.

பின்னர் கடையில் இருந்த ரூ.60 ஆயிரத்தை பறித்ததோடு, உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்தையும் 5 பேரும் மாற்றினார்கள். மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே சொல்லக்கூடாது எனவும் 5 பேரும் மிரட்டி இருந்தனர். அவர்கள் 5 பேர் மீதும் சந்தேகம் அடைந்த உரிமையாளர், ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ஊர்க்காவல் படையினர் கைது

இந்த நிலையில், சலூன் கடை உரிமையாரை மிரட்டி ரூ.1.60 லட்சம் பறித்த வழக்கில் 5 பேரை ராமமூர்த்திநகர் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் ஆர்.டி.நகர் காவல் பைரசந்திராவை சேர்ந்த சையத் கலீம் (வயது 28), ஆசிப் (27), சம்பங்கிராம் (31), ஆனந்த்ராஜ் (30), வினாயக் (28) என்று தெரிந்தது. இவர்களில் சையத் கலீம் பத்திரிகையாளர் ஆவார். மற்ற 4 பேரும் ஊர்க்காவல் படைவீரர்கள் ஆவார்கள். 4 பேரும் வெவ்வேறு போலீஸ் நிலையங்களில் ஊர்க்காவல் படை வீரர்களாக வேலை செய்தார்கள்.

எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் போலீஸ்காரர்கள் எனக்கூறி கொண்டு, சலூன் கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. கைதான 5 பேரிடம் இருந்து ரூ.1.60 லட்சம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 5 பேர் மீதும் ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்