குண்டும்-குழியுமான சாலை
ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியகுட்டை வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம் அருகில் ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் இந்த ரோட்டில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. எனவே குண்டும்-குழியுமான சாலையை சரிசெய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரவி, ஈரோடு.
பழைய மின்கம்பம் அகற்றப்படுமா?
கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்டது 46 புதூர் சின்னசெட்டிபாளையம் ஆசிரியர் நகர் பகுதி. இங்குள்ள ரோட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பழுதான மின் கம்பத்துக்கு பதிலாக புதிய கம்பம் நடப்பட்டது. ஆனால் பழைய மின்கம்பம் அகற்றப்படவில்லை. உடனே அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆசிரியர் நகர்.
வாகனங்கள் நிறுத்த இடவசதி
அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தின் முன்பு தனியார் வாடகை கார்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்த இடம் இன்றி தவிக்கிறார்கள். எனவே தேவையற்ற வாகனங்களை அப்புறப்படுத்தி அலுவலக சம்மந்தமாக வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ள இடவசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், அவல்பூந்துறை.
குழாய்கள் பொருத்தப்படுமா?
அந்தியூர் புதுப்பாளையத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் தொட்டி அமைத்துள்ளனர். இந்த தொட்டியில் 4 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு குழாயில் இருந்து மட்டும் தண்ணீர் வருகிறது. மற்ற குழாய்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியில் உடைந்து காணப்படும் குழாய்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்.
வீணாகும் குடிநீர்
ஈரோடு நாடார்மேட்டில் இருந்து கொல்லம்பாளையம் மெயின்ரோட்டில் சாஸ்திரிநகர் பிரிவு பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. ரெயில்வே காலனியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு செல்லும்போது இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். வாகனங்கள் வேகமாக செல்லும்போது சாலையில் வீணாக செல்லும் குடிநீர் பொதுமக்கள் மீது படுவதால் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகம், கொல்லம்பாளையம்.