பெரம்பலூர் நகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பெரம்பலூர் நகராட்சியில் வெற்றி பெற்ற 21 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
பெரம்பலூர்
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 15 வார்டுகளிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம், தி.மு.க. கூட்டணி 16 வார்டுகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க. வசம் இருந்த பெரம்பலூர் நகராட்சியை தனிப்பெரும் பான்மையுடன் கைப்பற்றியது.
பதவி ஏற்பு விழா
இந்தநிலையில், 21 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் முறைப்படி பதவி ஏற்புக்கான விழா பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற 21 கவுன்சிலர்களும் வார்டு வாரியாக மேடைக்கு அழைக்கப்பட்டு நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்திய அலுவலருமான குமரிமன்னன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் 21 கவுன்சிலர்களும் மேடையில் நகராட்சி ஆணையருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.