அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிப்பெருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்ட சக்தி கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று காலை கோவிலை வந்தடைந்தது. அதன்பிறகு விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தங்க கவச அலங்காரம்
இதேபோல் உற்சவ அம்மனுக்கு 16 கரங்களுடன் ஆவேச அங்காளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 9.45 மணிக்கு உற்சவ அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றிலும் உலா வந்தார். 10 மணிக்கு பூசாரிகள் பிரம்ம கபாலத்தை (கப்பறைமுகம் என்று கூறுவார்கள்) எடுத்து ஆடியபடி மயானத்தை நோக்கி புறப்பட்டனர்.
10.30 மணிக்கு மயானத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆவேச அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள், வயலில் விளைந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர்.
கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் சிலர் அம்மன் வேடமிட்டும், கோழிகளை கடித்தபடியும் சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக அம்மன் வேடமிட்டிருந்தவர்களை கண்ட பக்தர்கள் சாலையில் படுத்தனர். அவர்கள் மீது அம்மன் வேடமிட்டவர்கள் நடந்து சென்று ஆசி வழங்கினர். இவ்வாறு செய்தால் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை தொடர்ந்து இரவில் ஆண் பூதவாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தேரோட்டம்
விழாவில் இன்று(வியாழக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூதவாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி(சனிக்கிழமை)தீ மிதி திருவிழாவும், 7-ந் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.