சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 52 பேர் காயம்
விரிஞ்சிபுரத்தில் நடந்த காளை விடும் திருவிழாவில் பாய்ந்து வந்த காளைகள் முட்டி தள்ளியதில் 52 பேர் காயம் அடைந்தனர்.
அணைக்கட்டு
விரிஞ்சிபுரத்தில் நடந்த காளை விடும் திருவிழாவில் பாய்ந்து வந்த காளைகள் முட்டி தள்ளியதில் 52 பேர் காயம் அடைந்தனர்.
மயானக்கொள்ளை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள விரிஞ்சிபுரம் கிராமத்தில் மயானக்கொள்ளையை முன்னிட்டு 154-ம் ஆண்டாக காளை விடும் திருவிழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொள்ள லத்தேரி, மிட்டூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை, ஆந்திர மாநிலம் பலமனேர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 410 மாடுகள் வந்திருந்தன.
காலை 6 மணி முதல் காளைகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
அதனை தொடர்ந்து அணைக்கட்டு கால்நடை மருத்துவர் மோகன்குமார் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தபின் 310 காளைகளுக்கு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கினர்.
தொடங்கி வைத்தனர்
அதன்படி 10 மணிக்கு தொடக்க விழா நடந்தது. அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன், வேலூர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகில், விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலச்சந்திரன், விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பார்வையாளர்கள் மத்தியில் அந்த காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின.
அப்போது கட்டுக்கடங்காத ரசிகர்கள் விசில் அடித்தும் மாட்டின் மீது தட்டியும் அவற்றை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர்.
பல பரிசுகளை வென்ற மிட்டூர்புலி என்ற காளை பாய்ந்து வந்தபோது பார்வையாளர்கள் மிரண்டு ஒதுங்கினர்.
காளைகள் முட்டியதில் 52 பேர் காயமடைந்தனர்.
அனைவருக்கும் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமில் உள்ள டாக்டர்கள் நிர்மல்குமார், தீபிகா, வெற்றிச்செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
மண்டை உடைந்தும், முகம் கிழிந்தும், கை கால்கள் முறிந்தும் காயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாக்குவாதம்
இந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு விழா நிறுத்தப்படும் என போலீசார் ஒலிபெருக்கிமூலம் அறிவித்தனர். ஆனால் 100-க்கும் மேற்பட்ட காளைகள் ஓடுவதற்கு தயாராக வாடிவாசலில் நிறுத்தப்பட்டிருந்தன. இரண்டு மணி ஆனதும் விழா நிறைவு பெற்றதாக போலீசார் ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் போலீசாரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எம்.எல்.ஏ. தலையிட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலச்சந்திரன் அவர்கள் வேண்டுகோளின்படி அரைமணிநேரம் நீட்டிக்க கலெக்டர் அனுமதி அளித்தார்.
சரியாக 3 மணிக்கு விழா தொடங்கியது அரை மணி நேரம் கழித்து மீண்டும் விழா நிறுத்தப்பட்டதால் மீதி இருந்த 20 காளையின் உரிமையாளர்கள் விழா குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இருந்து நாங்கள் காளைகளை ஓட்டி வந்து உள்ளோம். எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன், காளை விடுவதற்கு கண்டிப்பாக நாங்கள் அனுமதி தர மாட்டோம். எனவே அனைவரும் காளைகளுடன் செல்லலாம் என அறிவித்ததால் காைள உரிமையாளர்கள் விழாக்குழுவினரை வசைபாடி சென்றனர்.
பரிசளிப்பு
இதனையடுத்து பரிசுகள் அறிவிக்கப்பட்டன. முதல் பரிசு ரூ.2 லட்சமும், இரண்டாவது பரிசு ரூ.1 லட்சத்து 55 ஆயிரமும், மூன்றாவது பரிசு ரூ.ஒரு லட்சமும், நான்காவது பரிசு ரூ.90 ஆயிரம் என 55 பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் வார்டு உறுப்பினர்களும் மற்றும் இளைஞர்களும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.