புகழூர், பள்ளப்பட்டி, குளித்தலை நகராட்சிகளில் 75 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர்
புகழூர், பள்ளப்பட்டி, குளித்தலை நகராட்சிகளை சேர்ந்த 75 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.
நொய்யல்,
புகழூர் நகராட்சி
புன்செய்புகழூர் தேர்வு நிலை பேரூராட்சியுடன் தமிழ்நாடு காகித ஆலை புகழூர் பேரூராட்சி மீண்டும் இணைக்கப்பட்டு புகழூர் இரண்டாம் நிலை நகராட்சியாக கடந்த 7-12-2021-ந் தேதியன்று உருவாக்கப்பட்டது. புகழூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதனைதொடர்ந்து நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே கடும்போட்டி நிலவியது.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதியும் நடைபெற்றது.
பதவி ஏற்பு
இதில், தி.மு.க. 20 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தலா ஒருவரும் என மொத்தம் 22 பேர் வெற்றி பெற்றனர். அதேபோல் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா சார்பில் தலா ஒருவர் வெற்றி பெற்றனர்.
இந்தநிலையில் புகழூர் நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்கும் விழா நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில், 24 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். நகராட்சி கமிஷனர் கனிராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்து அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளப்பட்டி
பள்ளப்பட்டி பேரூராட்சி சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளப்பட்டி பேரூராட்சியாக இருந்தபோது 15 வார்டுகள் இருந்தன. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே கடும்போட்டி நிலவியது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதி நடைபெற்றது. இதில், தி.மு.க. 19 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 2 இடங்களிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்தையும் கைப்பற்றினர். இதேபோல் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களையும் வெற்றி பெற்றனர்.இதையடுத்து, வெற்றி பெற்ற நகராட்சி கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு விழா பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளப்பட்டி நகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
குளித்தலை
குளித்தலை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க. 20 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. ஒரு வார்டையும் கைப்பற்றியது. இதேபோல் அ.தி.மு.க. ஒரு வார்டையும், சுயேச்சைகள் 2 வார்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, வெற்றி பெற்ற 24 கவுன்சிலர்களும் குளித்தலை நகராட்சி அலுவலக வளாகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர். தேர்தல் நடத்தும் அலுவலரான சுப்புராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் உள்பட கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினர், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளை தலைவர் தேர்தல்
புகழூர், பள்ளப்பட்டி, குளித்தலை நகராட்சிகளை சேர்ந்த 75 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர். பின்னர் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகங்களில் இருந்து வெளியே வந்த போது அவர்களது ஆதரவாளர்கள் மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர். புகழூர் மற்றும் பள்ளப்பட்டி நகராட்சிகளின் முதல் தலைவர் பதவிக்கான தேர்தலும், குளித்தலை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது. மதியம் 2 மணியளவில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.