திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளில் 149 உறுப்பினர்கள் பதவி ஏற்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 149 உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 149 உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
கண்ணமங்கலம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கண்ணமங்கலம் பேரூராட்சியில் 12 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியும், 2 வார்டுகளில் அ.தி.மு.க.வும், ஒரு வார்டில் பா.ம.க.வும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று வெற்றி பெற்ற 15 பேரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவி ஏற்றனர். அவர்களுக்கு கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வேட்டவலம்
வேட்டவலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், 14 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்களுக்கும், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வமணி முன்னிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் மே.சுகந்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில், 12-வது வார்டு உறுப்பினர் வைத்தீஸ்வரிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம், நகர செயலாளர் ப.முருகையன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க.-8, அ.தி.மு.க.-4, விடுதலை சிறுத்தைகள் கட்சி-1, சுயேச்சை-2 என மொத்தம் 15 பேர் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து பேரூராட்சி அலுவலக மன்ற கூடத்தில் உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. உறுப்பினர்களுக்கு, செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ஏழுமலை, பேரூராட்சி இளநிலை உதவியாளர் தனமல்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போளூர்
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க.-12, அ.தி.மு.க.-2, காங்கிரஸ்-2, பா.ம.க.-1, சுயேச்சை-1 என மொத்தம் 18 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான முஹம்மது ரிஜ்வான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ராஜேந்திரன், கே.வி.சேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ெபரணமல்லூர்
பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில், தி.மு.க. 5 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், அ.ம.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி பெரணமல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுக்கு, செயல் அலுவலர் தமிழரசி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தேசூர்
தேசூர் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க.-6, அ.தி.மு.க.-1, பா.ஜ.க.-1, பா.ம.க.-1 மற்றும் சுயேச்சைகள் 3 என மொத்தம் 12 உறுப்பினர்களுக்கு செயல் அலுவலர் ஜெயந்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு பேரூராட்சியில் தி.மு.க. 10 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், காங்கிரஸ், பா.ம.க. தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. செயல் அலுவலர் ரவிசந்திரபாபு, உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் ெசய்து வைத்தார்.
செங்கம்
செங்கம் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி, 18 உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதுப்பாளையம்
புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷ்னாபீ தலைமை தாங்கி, 12 உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
களம்பூர்
களம்பூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், பா.ம.க., சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
களம்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.