கரூர் மாநகராட்சியில் 48 கவுன்சிலர்கள் பதவியேற்றனர்
கரூர் மாநகராட்சியில் 48 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.
கரூர்,
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட்சிகளும், அரவக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், மருதூர், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், நங்கவரம், புஞ்சை தோட்டக்குறிச்சி ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 246 வார்டுகளுக்கு 1,330 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 24 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 363 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் 241 வார்டுகளுக்கு மொத்தம் 938 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இதனைதொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவும், 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில், கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 42 வார்டுகளையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா ஒரு வார்டையும், அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
கரூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்பு விழா நேற்று காலை 10 மணிக்கு மாநகராட்சி புதிய கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் 48 கவுன்சிலர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவர்கள் உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டனர். இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மாநகராட்சி பொறியாளர் நக்கீரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாலை அணிவித்து மரியாதை
கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் மாநகராட்சி வளாகத்தில் திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும், அங்கு அமைக்கப்பட்டு இருந்த இருக்கைகளில் கவுன்சிலர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து கண்டுகளித்தனர். பதவியேற்பு விழாவையொட்டி நகராட்சி பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பதவியேற்பு விழா நிறைவடைந்தவுடன் கரூர்- கோவை ரோட்டில் உள்ள பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் சிலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கவுன்சிலர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கரூர் மேயர் பதவியை அலங்கரிக்கப்போவது யார்?
கரூர் மாநகராட்சி முதல் மேயர் தேர்தலை சந்தித்து உள்ளது. தற்போது மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மறைமுகமாக கவுன்சிலர்கள் மூலம் ஓட்டு போட்டு மேயரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதனால் 48 வார்டுகளில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியின் கவுன்சிலரே கரூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்தநிலையில் கரூர் மாநகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில், தேர்ந்தெடுப்பவர் கரூர் மாநகராட்சியின் முதல் மேயர் ஆவார். இதனால் கரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் பதவியை அலங்கரிக்கப்போவது யார்? என்பதை அறிய அரசியல் கட்சியினர் மட்டுமின்றி கரூர் மாவட்ட மக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.