புதுச்சேரி-பெங்களூரு விமான சேவை மார்ச் 27 முதல் தொடங்கும் என அறிவிப்பு
புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மார்ச் 27-ல் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது.
புதுச்சேரி,
மத்திய அரசு நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதிக் கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.
அத்திட்டத்தின்படி புதுச்சேரியில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து, பெங்களூரூக்கு விமான சேவை தொடங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்கியது.
அதன்பின்னர் கொரோனா காலத்தில் விமான சேவைகள் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போது புதுவையிலிருந்து விமானத்தை இயக்க ஆறு விமான நிறுவனங்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில், இச்சேவைகள் எப்போது தொடங்கும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதரபாத்துக்கு விமான சேவை இயங்கியது. மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு டெண்டர் விட்ட காலம் முடிவடைந்தது. இப்போது மீண்டும் விமான சேவையை வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளோம். புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கும். அடுத்த வாரத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு தொடங்கும். ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.