சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.
வால்பாறை
ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது.
தவக்காலம்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.
அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.
இந்த தவக்காலத்தின்போது கிறிஸ்தவர்கள் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள். இந்த தவக்காலத்தின் தொடக்கமாக கோவை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
சாம்பல் புதன் வழிபாடு
வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து வால்பாறை தூய இருதய ஆலயம், ரொட்டிக்கடை புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம், முடீஸ் புனித அந்தோணியார் ஆலயம் ஆகிய கத்தோலிக்க ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலம் தொடங்கப்பட்டது.
வால்பாறை தூய இருதய ஆலயத்தில் நடந்த சாம்பல் புதன் சிறப்பு வழிபாட்டில் சாம்பல் புதனை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குகுரு மரிய ஜோசப் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளமிட்டார்."மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே" என்பதை நினைவுபடுத்தி இந்த நிகழ்ச்சி நடந்தது.
சிலுவைப்பாதை
இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலியை ஒப்புக்கொடுப்பது, சிலுவை பாதை வழிபாட்டை நடத்துவது பல்வேறு ஆலயங்களுக்கு திருப்பயணங்கள் செல்வது, தர்ம காரியங்களை செய்வது, பாதயாத்திரை செல்வது போன்ற பக்தி முயற்சிகளை மேற்கொள்வார்கள்.