பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய 1200 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய 1200 கிலோ குட்காவை தொப்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் குட்கா கடத்தி வருவதாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தொப்பூர் அருகே தொம்பரகாம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் நீண்ட நேரமாக கன்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை திறந்து சோதனை செய்தனர்.
அதில் ரகசிய அறை அமைத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,200 கிலோ குட்கா பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்காவுடன் லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. குட்கா கடத்தியவர்கள் மற்றும் லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.