போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம் பேரூராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு விழாவில் பரபரப்பு

தலைஞாயிறில் நடந்த பேரூராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு விழாவில் போலீசாருடன், தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-02 19:00 GMT
பேரூராட்சி அலுவலகம் அருகே திரண்டிருந்த கூட்டம்.
வாய்மேடு:-

தலைஞாயிறில் நடந்த பேரூராட்சி உறுப்பினர் பதவி ஏற்பு விழாவில் போலீசாருடன், தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசாருடன் வாக்குவாதம்

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடந்தது. இதன் முடிவுகள் 22-ந் தேதி அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த 8 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 7 பேரும் என மொத்தம் 15 பேரும் பேரூராட்சி உறுப்பினர்களாக பேரூராட்சி செயல் அலுவலர் குகன் முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முன்னதாக அ.தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் அவை பாலசுப்பிரமணியன், சவுரிராஜன் ஆகியோர் முன்னிலையில் தலைஞாயிறு கடைத்தெருவில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். 

போலீசாருடன் வாக்குவாதம்

அதேபோல் தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர் மகாகுமார், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். 
இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் வெளியூர்களில் இருந்து கட்சிக்காரர்கள் மற்றும் உறுப்பினர்களின் உறவினர்களை கூட்டமாக அதிக அளவில் சேர்த்து வந்ததாகவும், அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று கூறி தி.மு.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு உடனடியாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

நாளை தலைவர்-துணைத்தலைவர் தேர்தல்

தலைஞாயிறு பேரூராட்சியில் அ.தி.மு.க.வுக்கு, தி.மு.க.வை விட ஒரே ஒரு உறுப்பினர் கூடுதலாக உள்ளார். இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் தலைஞாயிறு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 
நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவின்போது மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு ராமு, துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, செந்தில்குமார், நாகலட்சுமி ஆகியோர் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்