குறைந்த வாடகையில் கூடுதல் அறுவடை எந்திரங்கள் வழங்க வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்த வாடகையில் கூடுதல் அறுவடை எந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-02 15:01 GMT
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்த வாடகையில் கூடுதல் அறுவடை எந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சம்பா அறுவடை பணி
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றது. இதில் பருவ மழை காரணமாக சம்பா, தாளடி பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாப்பதிலும், முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மறுநடவு என இரட்டிப்பு செலவு செய்து சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இரண்டு செயின் டைப் எந்திரங்களும், 5 டயர் டைப் அறுவடை எந்திரங்களும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விடப்படுகின்றன. செயின் டைப் அறுவடை எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,630, டயர் டைப் அறுவடை எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1010 வசூல் செய்யப்படுகிறது.
அறுவடை எந்திரங்கள்
மேலும் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு செயின் டைப் எந்திரத்திற்கு ரூ.2,500, டயர் டைப் அறுவடை எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1800 வாடகை நிர்ணயம் செய்துள்ளனர். அதே நேரத்தில் ஈரோடு, கரூர், திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவடை எந்திரங்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு வந்து அறுவடை பணிகளில் ஈடுபட்டு உள்ளது.
அரசு நிர்ணயித்த வாடகையை விட விவசாயிகளிடம் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரத்திற்கு மேல் வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 
குறைந்த வாடகையில்
எனவே விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் வாடகை வசூல் செய்யும் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை மூலமாக கூடுதல் அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
---

மேலும் செய்திகள்