‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-02 14:37 GMT

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா?

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி கடைவீதியில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள கடை வீதி பகுதியில் சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவ்வப்போது விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த கடைவீதி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், இந்த சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

==

சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த சாலையோரம் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை இருந்து வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

==

பஸ் நிலையத்தில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

நாமக்கல் பஸ் நிலையத்திற்கு தினசரி சுமார் ஆயிரம் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தில் ஆங்காங்கே காணப்படும் பள்ளத்தால் பஸ் டிரைவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் பஸ்களின் உதிரி பாகங்களும் அடிக்கடி பழுதாகி வருகிறது. மேலும் பயணிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் ஆங்காங்கே காணப்படும் பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், நாமக்கல்.

===

மரக்கிளைகளை வெட்ட வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டி கிராமத்தில் சாலை அருகில் உள்ள மரத்தின் கிளைகளில் மின்சார கம்பிகள் உரசி தீப்பற்றி எரிகிறது. இதனால் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொது மக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இது போன்று இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை வெட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ஊர்பொதுமக்கள், புளியம்பட்டி.

==

குப்பைகளை எரிக்ககூடாது

சேலம் அன்னை இந்திரா நகர் 9-வது தெரு பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால் அந்த பகுதி மக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இங்கு குவிந்துள்ள குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள், அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், அன்னை இந்திரா நகர், சேலம்.

==

போலீசார் ரோந்து செல்ல வேண்டும்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஏ.கே.இ. 1-வது தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்கின்றனர். இதனால் கூலி வேலை செய்பவர்கள் தங்களது வருமானத்தில் பெரும் பகுதி பணத்தை இழக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி போலீசார் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சென்று தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.முருகேசன், திருச்செங்கோடு.

===

குப்பை தொட்டி வேண்டும்

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பொதுமக்கள் குப்பைகள் கொட்ட அந்தந்த பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவேண்டும். நீண்டகாலமாக வார்டுகளில் குப்பை தொட்டிகள் இல்லாததால் அந்த பகுதி மக்கள் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் வார்டுகளில் குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், கிருஷ்ணகிரி.

==

தெருநாய்கள் தொல்லை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வெட்டுக்காடு பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இந்த தெருநாய்கள் இரவு நேரங்களில் கூட்டமாக சேர்ந்து சண்டை போட்டுக்கொண்டு சத்தமிடுவதால் அந்த பகுதி மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். எனவே அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.

===

மேலும் செய்திகள்