தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்ற வழக்கில் கைதான 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கொலை முயற்சி
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோழப்பன்பண்ணை சோலையப்பன் மகன் மாரி (வயது 26) என்பவரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். காயல்பட்டினம் அருணாசலபுரத்தை சேர்ந்த மகராஜன் மகன் திருமூர்த்தி என்ற சுரேஷ் மூர்த்தி (25) என்பரை திருச்செந்தூர் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்தனர். இதே போன்று தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த தஸ்நேவிஸ் மகன் விமல் என்ற சிலுவை பீட்டர் விமல் (40), கணேஷ்நகரை சேர்ந்த சங்கர் மகன் ராஜா (20) ஆகிய 2 பேரையும் தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் தற்போது பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம்
இந்த 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாரி, திருமூர்த்தி என்ற சுரேஷ்மூர்த்தி, விமல் என்ற சிலுவை பீட்டர் விமல், ராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
இந்த ஆண்டு இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட 19 பேர், போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் உட்பட 43 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.