செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5¾ லட்சம் மோசடி-வடமாநிலங்களை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு
செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வடமாநிலங்களை சேர்ந்த 11 பேர் மீது சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வடமாநிலங்களை சேர்ந்த 11 பேர் மீது சேலம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் கோபுரம்
சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 65). இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், உங்களுடைய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க முன்பணமாக ரூ.40 லட்சம் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய சம்பத்குமார் தன்னுடைய நிலத்தின் விவரம் அனைத்தையும் குறுஞ்செய்தி வந்த எண்ணுக்கு அனுப்பினார்.
இதையடுத்து அவருடைய செல்பொன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய நபர்கள், பத்திரம் பதிவு செய்ய ரூ.5 ஆயிரத்து 500-ம் மற்றும் ஆதார் எண், வங்கிக்கணக்கின் எண் உள்ளிட்ட விவரங்களும், குறிப்பிட்ட தொகையையும் கேட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு சம்பத்குமார் பல்வேறு தவணைகளாக ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 624 அனுப்பினார்.
11 பேர் மீது வழக்கு
இதையடுத்து செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக அவருக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பத்குமாரிடம் மோசடி செய்தது மேற்கு வங்காளத்தை சேர்ந்த அஞ்சன் சென், மும்தாந்சஞ்சல் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுர்ஜித்குமார், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சமசாபேகம் ஆகியோர் என்பது தெரியவந்தது. அதன்பேரின் அவர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வாழப்பாடி பகுதியை சேர்ந்த ரேவதி (45) என்ற பெண்ணிடமும் செல்போன் கோபுரம் அமைப்பது தொடர்பாக ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 624 மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார், டெல்லியை சேர்ந்த பர்வேஸ், நரேந்திர் ராகவ், சுமித்குப்தா, அபிஷேக் சைனி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.