சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 4 கால சாம பூஜை

மகா சிவராத்திரியையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 4 கால சாம பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-01 21:09 GMT
சுசீந்திரம்:
மகா சிவராத்திரியையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 4 கால சாம பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4 கால சாம பூஜை
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி ஆண்டுதோறும் 4 கால சாம பூஜையுடன் அபிஷேகம், ஆராதனை போன்றவை நடைபெறும். 
இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று இரவு 10 மணியளவில் கொன்றையடி நாதருக்கு அபிஷேகம், தொடர்ந்து மூலவராகிய தாணுமாலய சாமிக்கு அபிஷேகம் போன்றவை நடந்தது. 
முதல் கால பூஜை 11 மணிக்கு நடந்தது. அப்போது, தாணுமாலய சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டது.
இதுபோல், நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால பூஜையும், 1 மணிக்கு 3-வது கால பூஜையும், அதிகாலை 2.30 மணிக்கு 4-வது கால பூஜையும் நடைபெற்றது. 
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஒவ்வொரு கால பூஜை நடக்கும் போதும், அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனை காண நேற்று இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.
சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முழுவதும் கோவில் நடை திறந்து இருந்தது. 12 சிவாலயங்களிலும் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் தரிசனம் செய்ய வந்தனர்.
நாட்டியாஞ்சலி
தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளை சார்பில் மூலவராகிய தாணுமாலயன் சன்னதியின் எதிரே உள்ள கல் மண்டபத்தில் பல வண்ணங்களில் ஹரிஹரன் உருவத்தை கோலமாக வரைந்து அதனை சுற்றிலும் தோரணங்கள் கட்டி குத்துவிளக்கேற்றினர். 
கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கலையரங்கத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்