கும்பகோணம் பகுதி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
மகாசிவராத்திரியையொட்டி கும்பகோணம் பகுதி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பகோணம்;
மகாசிவராத்திரியையொட்டி கும்பகோணம் பகுதி சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகேஸ்வரர் கோவில்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை நடப்பது வழக்கம். நேற்று நாகேஸ்வரர் கோவிலில் 1008 சிவ நாமஅர்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி தனித்தனியாக களிமண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம், வெற்றிலை, பாக்கு, திருநீறு, குங்குமம், வாழைப்பழம், சூடம், வில்வம், ருத்திராட்சம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு சிவாச்சாரியார்கள் 1008 சிவ நாமங்களை கூற சிவ நாம அர்ச்சனை நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிவநாமத்தை கூறி வழிபட்டனர். பின்னர் நாகேஸ்வரரையும், பெரியநாயகி அம்மனையும் வழிபட்டனர். இதைப்போல கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மகாசிவராத்திரியையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாபநாசம்
பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்க சாமி கோவில்,
திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவில், தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் கோவில், பாபநாசம் வருண ஜலேஸ்வரர் கோவில், கோபுராஜபுரம் சொர்ணபுரீஸ்வரர் கோவில், உத்தாணி ஐராவதீஸ்வரர் கோவில், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிவராத்திரி வழிபாடு நேற்று நடைபெற்றது.
விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாபநாசம் 108 சிவாலயம் கோவிலில் பக்தர்கள் 108 முறை கோவிலை சுற்றி வலம் வந்தனர். சிவராத்திரியையொட்டி பாபநாசம் 108 சிவாலயம், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் ஆகிய கோவில்களில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சர்ந்த இசை நாட்டிய கலைஞர்களின் திருமுறை, இன்னிசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.