ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியல்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

Update: 2022-03-01 20:49 GMT
வேப்பந்தட்டை:

சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக திட்டமிடப்பட்டு, அதற்காக மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் விழா மேடை, வாடிவாசல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் விசுவக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று முன்தினம் இரவு அறிவிப்பு வெளியானது. இதனால் ஏமாற்றமடைந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் விழாக்குழுவினர் உள்ளிட்டோர் நேற்று காலை பெரம்பலூர் செல்வதற்காக விசுவக்குடி வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் சரவணன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், அதனை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் விசுவக்குடி-பெரம்பலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்