மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மீன்சுருட்டி:
மகா சிவராத்திரி
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூரில் உள்ள சிவன் கோவில்களில் 4 கால பூஜை நடந்தது. மேலும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் 4 கால பூஜைகள் நடைபெற்றது. இதில் முதல்கால பூஜை இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடந்தது. இதில் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு 2-ம் கால பூஜை 10.30 மணிக்கும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1.30 மணிக்கும், 4-ம் கால பூைஜ இன்று அதிகாலை 4.30 மணியளவிலும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய விழித்திருந்து சுவாமியை வழிபட்டனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெங்களூரு, சென்னை, திருச்சி, சின்னமனூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து பக்தி பெருக்குடன் நாட்டியம் ஆடினர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நேற்று நிறைவு பெற்றது.
தா.பழூர்
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அனைத்து கோவில்களிலும் 4 கால பூஜைகள் நடைபெறும். திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சிவராத்திரி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், 4 கால பூஜைகளையும் விமரிசையாக நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவபெருமான், பக்தர்களுக்கு காட்சி தந்தார். விஸ்வநாத பெருமானை நோக்கி தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாடப்பட்டன. இறைவனுக்கு ஷோடச உபசாரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சரண கோஷங்கள் எழுப்பினர். இரவு 11 மணி அளவில் இரண்டாம் கால பூஜையும், இன்று அதிகாலை 2 மணி அளவில் மூன்றாம் கால பூஜையும், 4 மணி அளவில் நான்காம் கால பூஜையும் நடைபெற்றது. நான்கு கால பூஜைகளுக்கும் சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
உடையார்பாளையம்
உடையார்பாளையத்தில் உள்ள பயறணீஸ்வரர் கோவிலில் மாலை 7 மணிக்கு முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து 10 மணி அளவில் இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 1 மணி அளவில் மூன்றாம் கால பூஜையும், இன்று அதிகாலை 4 மணி அளவில் நான்காம் கால பூஜையும் நடந்தது. இதில் ஒவ்வொரு பூஜையின்போதும் சிவலிங்கத்திற்கு பல்வேறு வகையாக திரவியங்களை கொண்டு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஒவ்வொரு அபிஷேகம் முடிந்து பிறகும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.