திருச்செந்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 24 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 24 குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் வழங்கினார்
திருச்செந்தூர்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 24 குழந்தைகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் வழங்கினார்.
பிறந்த நாள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 24 குழந்தைகளுக்கு, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்க மோதிரம் வழங்கினார். தாய்மார்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து அவர் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி- சேலைகள் வழங்கினார்.
தங்கத்தேர்
பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அருணகிரி, திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சிவஆனந்தி, சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காயல்பட்டினம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நகர தி.மு.க. பொறுப்பாளர் கே.ஏ.எஸ்.முத்து முகமது தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் எஸ்.பி.ஆர்.சுகு, நகர அவைத்தலைவர் முகமது மைதீன், நகர துணைச்செயலாளர்கள் லேண்ட் மம்மி, கதிரவன், நகர இளைஞரணி செயலாளர் கலீலுர் ரஹ்மான், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஹாஜி, முகமது அலி ஜின்னா, பொருளாளர் தாஜூதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு ஆடைகள் மற்றும் சேலைகள் வழங்கினார். மேலும் ஏழை-எளிய 10 பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கினார். கட்சியில் மூத்த தி.மு.க உறுப்பினருக்கு உதவித்தொகையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரும், மேல் ஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவருமான சதீஷ்குமார், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவீன்குமார், திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் செங்குழி ரமேஷ் மற்றும் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆத்தூர் மெயின் பஜாரில் நகர தி.மு.க. சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆத்தூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் முருகப்பெருமாள் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நவீன்குமார், நகர அவைத்தலைவர் அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் காயல்பட்டினம் நகர தி.மு.க. சார்பில் காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள தபால் நிலையம் முன்பும், புதிய பஸ் நிலையம் அருகிலும் நகர தி.மு.க. பொறுப்பாளர் முத்து முகமது தலைமையில் தி.மு.க. கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகமது அலி ஜின்னா, நகர அவைத்தலைவர் முகமது மைதீன், இளைஞர் தி.மு.க. இளைஞரணி செயலாளர் கலீலுர் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.