நகைக்கடையில் திருடிய பெண் ஊழியர் தாயுடன் கைது

வள்ளியூரில் நகைக்கடையில் திருடிய பெண் ஊழியர் தாயுடன் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2022-03-01 19:40 GMT
வள்ளியூர்:
வள்ளியூரில் நகைக்கடையில் திருடிய பெண் ஊழியர் தாயுடன் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகை மீட்கப்பட்டது. 

நகைகள் மாயம் 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவர் வள்ளியூர்-ராதாபுரம் மெயின் ரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சரிவர கடைக்கு வரவில்லை.  
சம்பவத்தன்று ராமச்சந்திரன் கடையில் உள்ள நகைகளின் இருப்பை சரிபார்த்தார்.

அப்போது 47 பவுன் தங்க நகைகளும், 4 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகளும் காணாமல் போனது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. 

போலீசில் புகார்

இதையடுத்து  ராமச்சந்திரன்   நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் பணகுடி அருகே உள்ள கோரியூரை சேர்ந்த சுபா (23) என்ற பெண்ணின் தாயார் அடிக்கடி கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது. 

இதனால் சுபா தனது தாயாருடன் சேர்ந்து கடையில் இருந்து நகைகளை திருடி சென்றதாக வள்ளியூர் போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

தாய்-மகள் கைது

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா ஆலோசனைப்படி, இன்ஸ்பெக்டர்கள் சாகுல்ஹமீது, சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, வள்ளியூரில் வைத்து சுபா, அவருடைய தாயார் விஜயலட்சுமி (48) ஆகிய 2 பேரையும் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரையும் போலீசார் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்