சிவன்கோவில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்ட சிவன்கோவில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:-
நாமக்கல் மாவட்ட சிவன்கோவில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் எழுந்தருளியுள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி மாலை காப்பு கட்டுதலும், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு மொகமிட்ட கொப்பரை பூஜையும் நடந்தது. செவ்வாய்க்கிழமை மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், நாளை (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு பிள்ளைப்பாவையும் நடக்கிறது. 4-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் மயானக்கொள்ளை மற்றும் பூஜையும், 5-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரமத்தி அங்காளம்மன் கோவில் 14 சமுதாய குடிபாட்டு மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
சிவலிங்க பூஜை
சிவராத்திரியை முன்னிட்டு மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் ஆறுகால பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் 108 சிவலிங்க பூஜை நடந்தது. எஸ். வாழவந்தி புன்னைவனநாதீஸ்வரர் கோவிலில் சிங்கார பாறையில் உள்ள சிவனுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. எஸ். வாழவந்தி அங்காளம்மன் கோவில், ஆரியர் அங்காளம்மன் கோயவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விடிய விடிய அபிஷேகம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மகா சிவராத்திரியை யொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2-ம் கால பூஜை, அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை 3-ம் கால பூஜை, அதிகாலை 4½ மணி முதல் காலை 6.30 மணி வரை 4-ம் கால பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி சாமிக்கு வில்வ இலை மற்றும் தாமரை பூவால் அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் நாமக்கல் தட்டாரத்தெருவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் கோவில், செல்லப்பம்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஆண்டாபுரம் காசி விசுவநாதர் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.