கோவிலூர் ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன- 50 பேர் காயம்
முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவிலூர் ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், 50 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.
ஆலங்குடி,
முத்துமாரியம்மன் கோவில்
ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமாத திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.
இதையொட்டி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து 600 காளைகளுக்கு அனுமதி வழங்கினர். மாடுபிடி வீரர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்து 300 பேரை களத்தில் இறங்க அனுமதித்தனர்.
50 பேர் காயம்
அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் வாடிவாசலில் இருந்து புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி எரிந்து விட்டு துள்ளிக்குதித்து சென்றன. இதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 50 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் 11 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசுகள்
இதையடுத்து, காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், மின்விசிறி, மிக்சி, வெள்ளி நாணயங்கள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கர்ணன், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.