இலங்கை தமிழர்களுக்கு 392 குடியிருப்புகள் ஒதுக்கீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு 392 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு நிலம் கயைகப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-03-01 18:26 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு 392 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு நிலம் கயைகப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா திருமலைச்சேரி, சோளிங்கர் தாலுகா பாணாவரம் ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். 
அவர் பேசியதாவது:-

392 குடியிருப்புகள் ஒதுக்கீடு

வாலாஜா தாலுகா திருமலைச்சேரி ஊராட்சியில் 292 குடும்பங்களும், சோளிங்கர் தாலுகா பாணாவரம் ஊராட்சியில் 90 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்பு கம்பிகள் பல இடங்களில் பழுதடைந்துள்ளது. அனைத்து குடியிருப்புகளிலும் கழிப்பறை கட்டமைப்புகள் பழுதடைந்து உள்ளதையும் சீர் செய்திட நிதி வர பெற்றுள்ளது.

இப்பணிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து தேவைப்படும் திட்ட அறிக்கையை தயார் செய்து பணிகளை முடிக்க வேண்டும். 

பாணாவரம் குடியிருப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். 

தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த புதிய குடியிருப்புகள் திட்டத்தில் 392 வீடுகள் ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கான நிலம் எடுப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், புலம்பெயர்ந்த இலங்கை வாழ் தமிழர் மறுவாழ்வு துறை தாசில்தார் பாக்கியநாதன், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்