வேலை வாங்கித்தருவதாக வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

வெளிநாட்டில் கப்பல் கம்பெனியில் வேலை வாங்கித்தருவதாக வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2022-03-01 17:51 GMT
நாகப்பட்டினம்:
வெளிநாட்டில் கப்பல் கம்பெனியில் வேலை வாங்கி த்தருவதாக வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பல் கம்பெனியில் வேலை
நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த வீரமணி மகன் உதயகுமார் (வயது 20). பி.எஸ்சி படித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்தார். இந்த நிலையில் உதயகுமாருக்கு தனது நண்பர்கள் மூலம் வாட்ஸ் அப்பில் டெல்லியை சேர்ந்த தினேஷ் ஷர்மா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதில் உதயகுமாரிடம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு கப்பல் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக, தினேஷ் ஷர்மா கூறியுள்ளார். மேலும் வேலை குறித்த விவரங்களையும், உதயகுமாரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.
ரூ.1½ லட்சம் மோசடி
இதற்காக  உதயகுமாரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் கேட்டுள்ளார். இதை நம்பிய உதயகுமார், கேட்ட தொகையை தினேஷ் ஷர்மா வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இதையடுத்து தினேஷ் ஷர்மாவிடம் இருந்து கப்பல் கம்பெனி வேலை தொடர்பான எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உதயகுமார், தினேஷ் ஷர்மா செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த உதயகுமார், நாகை சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்  மோசடி செய்த தினேஷ் ஷர்மாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்