மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 402 பேர் இன்று பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 402 பேர் இன்று (புதன்கிழமை) பதவியேற்கின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 402 பேர் இன்று (புதன்கிழமை) பதவியேற்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 402 பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 396 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பதவியேற்பு
இதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 402 பேரும் இன்று (புதன்கிழமை) அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையாளர், செயல் அலுவலர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கவுன்சிலராக பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பதவியேற்பு விழா மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாருஸ்ரீ தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்கின்றனர்.
ஆய்வு
இதனை முன்னிட்டு கூட்ட அரங்கம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
கூட்ட அரங்கில் உள்ள மைக்குகள் அனைத்தும் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. மேயர் அறை, துணை மேயர் அறை மற்றும் மேயருக்கான அங்கி, செங்கோல், மாலை உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதே போன்று பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சிகளில் அலங்காரங்களும் செய்யப்பட்டு உள்ளன.
மேயர் தேர்வு
இதைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய 42 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
காலை 9.30 மணிக்கு மேயர், தலைவர் தேர்தலும், மதியம் 2.30 மணிக்கு துணை மேயர், துணைத்தலைவர் தேர்தலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரால் நடத்தப்படுகிறது.
பாதுகாப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மாவட்டம் முழுவதும் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 இன்ஸ்பெக்டர்கள், 48 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 440 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் மட்டும் 65 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.