உக்ரைனில் சிக்கி தவிக்கும் ஊத்துக்கோட்டை மாணவர் வீடியோ வெளியிட்டு கதறல்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் ஊத்துக்கோட்டை மாணவர் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதன் காரணமாக உக்ரைன் நாட்டில் படிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டில் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வரும் ஊத்துக்கோட்டை சேர்ந்த மாணவர் சமீர் அஹமத் வெளியேற வழி இல்லாமல் பதுங்குகுழியில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீர் அஹமத் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
கார்கில் நகரத்திலுள்ள சர்வதேச மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளேன். இந்த பகுதிகளில் குண்டுகள் வீசப்படும் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஒரு வேளை மட்டும் தான் உணவு கிடைக்கிறது. இந்தியாவை சேர்ந்த 190 மாணவர்கள் இங்கு உள்ளோம். இதில் 90 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தற்போது போர் அதிகரித்து உள்ளதால் பதுங்குகுழியில் வசிக்கின்றோம். எங்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.