உக்ரைனில் இருந்து வீடு வரும் வரை பயத்துடன் இருந்தேன்-சேலம் திரும்பிய மாணவன் பேட்டி

உக்ரைனில் இருந்து வீடு வரும் வரை பயத்துடன் இருந்தேன் என்று சேலம் திரும்பிய மாணவன் சாந்தனு தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-28 22:30 GMT
சேலம்:
உக்ரைனில் இருந்து வீடு வரும் வரை பயத்துடன் இருந்தேன் என்று சேலம் திரும்பிய மாணவன் சாந்தனு தெரிவித்துள்ளார்.
சேலம் திரும்பிய மாணவன்
உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கு மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் ஒவ்வொருவராக சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். அவர்களில், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தனு என்ற மருத்துவ மாணவர் சேலம் வந்துள்ளார்.
சேலம் திரும்பிய மாணவன் சாந்தனு கூறியதாவது:-
இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் சண்டையை நான் இதுவரை பார்த்தது இல்லை. உக்ரைனில் குண்டு மழை பொழிகிறது. எப்படி தமிழகம் திரும்ப போகிறேன் என்று தெரியாமல் தவித்தேன். மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் தற்போது நாடு திரும்பியுள்ளேன்.
உக்ரைனில் இருந்து பஸ் மூலமாக விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, ரஷிய ராணுவ படையினர் பீரங்கி வாகனங்களுடன் கடந்து சென்றனர். அப்போது, ராணுவ வீரர்கள் சிலர் பதுங்கு குழிகளில் இருந்ததை பார்த்தேன். உக்ரைனில் இருந்து புறப்பட்டதில் இருந்து சேலம் வரும் வரைக்கும் பதற்றமாகவும், பயமாகவும் இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் தான் நிம்மதி அடைந்தேன். உக்ரைன்-ரஷியா போர் நடப்பதால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கு கோரிக்கை
இதுகுறித்து மாணவனின் தந்தை பூபாலன் கூறுகையில், உக்ரைனில் இருந்து மகன் வீடு திரும்பிய பிறகே நிம்மதி அடைந்தோம். மருத்துவ படிப்புக்காக அசல் ஆவணங்களை கல்லூரியில் வழங்கியுள்ளான். உக்ரைனில் போர் முடிந்த பிறகு கல்லூரி செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும். அதேசமயம், உக்ரைனில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் படிப்புகளை இந்தியாவில் மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்