பேத்தியை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி-வாயில் கருப்பு துணி கட்டி வந்த மக்கள் நீதிமய்யம் கட்சியினரால் பரபரப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பேத்தியை மீட்டுத்தரக்கோரி முதியவர் தீக்குளிக்க முயன்றார். மேலும் வாயில் கருப்பு துணி கட்டி வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பேத்தியை மீட்டுத்தரக்கோரி முதியவர் தீக்குளிக்க முயன்றார். மேலும் வாயில் கருப்பு துணி கட்டி வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
குறை தீர்க்கும் முகாம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். அப்போது கொங்கணாபுரம் அருகே கோணசமுத்திரம் பகுதியை சேர்ந்த பழனி (வயது 65) என்பவர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பழனியிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர். அவரிடம் போலீசார் விசாணை நடத்தினர்.
பேத்தியை மீட்க கோரிக்கை
அப்போது பழனி கூறும் போது, என்னுடைய பேத்தியை ஒருவர் கடத்தி சென்று விட்டார். அவளை மீட்டுத்தரக்கோரி கொங்கணாபுரம் போலீசில் புகார் செய்தேன். எனது புகார் மனு மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்பதால், நான் தீக்குளிக்க வந்தேன். போலீசார் என்னை தடுத்து நிறுத்தி விட்டனர் என்றார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
வாயில் கருப்பு துணியுடன்...
சேலம் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கிராமசபை போன்று, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் ஏரியா சபை வார்டு கமிட்டி அமைத்து அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று நேற்று பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.