கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது-சேலம் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
சேலம்:
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறியும், அதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலம் புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் அமைச்சர் கைது
தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளே இருக்க கூடாது என தி.மு.க. அரசு நினைக்கிறது. அதற்காகத்தான் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்றவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது குற்றமா?. அதுதானே நியாயம். ஆனால் போலீசார் கள்ள ஓட்டு போட்டவரை விட்டு விட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கண்டிக்கத்தக்கது
மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கைகோர்த்து தி.மு.க. வெற்றி பெறுவதற்கு துணை நின்றிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள்.
குறிப்பிட்ட வாக்குகளுக்கு மேல் எந்த பட்டனை அழுத்தினாலும் தி.மு.க சின்னத்திற்கு தான் வாக்குகள் பதிவாகும் வகையில் புரோகிராம் செய்து வெற்றி பெற்று இருக்கின்றனர் என்ற தகவல் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.
வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு, சதி திட்டம் தீட்டி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை. அப்படி தேர்தல் நடந்திருந்தால் அ.தி.மு.க. தான் வெற்றி பெற்றிருக்கும்.
வீட்டு வரி இருமடங்கு உயரும்
9 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைத்தான் தற்போது தி.மு.க.வினர் தொடங்கி வைத்து வருகிறார்கள். தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், வெள்ளி கொலுசு, தங்க நாணயம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க. பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்புவிழா முடிவடைந்தவுடன் வீட்டு வரி இரு மடங்கு உயரும். அதேபோல், குடிநீர், மின்சாரம் கட்டணமும் உயரும். இதை பார்க்கும் போது அ.தி.மு.க. ஆட்சியை பற்றி மக்கள் நினைத்து பார்ப்பீர்கள்.
அழிக்க முடியாது
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தால் கட்சியை அழித்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது. அப்படி நினைத்தால் தி.மு.க. காணாமல் போய் விடும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.