போர் நடக்கும் உக்ரைனில் பதுங்கு குழியில் தவிக்கும் மகனை பத்திரமாக மீட்டு கொண்டுவர வேண்டும்- டி.என்.பாளையம் பெற்றோர் கண்ணீர் பேட்டி
போர் நடக்கும் உக்ரைனில் பதுங்கு குழியில் தவிக்கும் மகனை பத்திரமாக மீட்டு கொண்டுவரவேண்டும் என்று டி.என்.பாளையத்தை சேர்ந்த பெற்றோர் கண்ணீருடன் கூறினர்.
டி.என்.பாளையம்
போர் நடக்கும் உக்ரைனில் பதுங்கு குழியில் தவிக்கும் மகனை பத்திரமாக மீட்டு கொண்டுவரவேண்டும் என்று டி.என்.பாளையத்தை சேர்ந்த பெற்றோர் கண்ணீருடன் கூறினர்.
பதுங்கு குழியில் தவிப்பு
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி வளர்மதி. இவர்களின் மகன் கிரண் (வயது 19), இவர் உக்ரைனில் டெனிப்ரோ பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் இருந்து உக்ரைன் சென்றார். இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு படிக்க சென்றுள்ள மாணவர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களில் கிரணும் ஒருவர். ஒருவேளை மட்டுமே உணவு உண்டு பதுங்கு குழியில் பரிதவித்து வரும் தன்னுடைய மகனை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என்று அவருடைய தந்தையும், தாயும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
ஒரு வேளை மட்டுமே உணவு
இதுகுறித்து தங்கராஜூம், வளர்மதியும் கூறியதாவது:-
என்னுடைய மகன் கிரண் உள்பட பல இந்திய மாணவர்கள் விடுதியில் உள்ள பதுங்கு குழியில் பதுங்கியுள்ளார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுகிறார்கள்.
மத்திய அரசு, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் போலந்து அல்லது ருமேனிய எல்லைக்கு வந்து விட வேண்டும் என்றும், அங்கிருந்து அனைவரையும் பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வந்துவிடுவோம் என்று கூறியுள்ளது.
ஆனால், டெனிப்ரோவில் இருந்து ருமேனியா அல்லது போலந்து எல்லைக்கு செல்லவேண்டும் என்றால் 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
கண்ணீர் கோரிக்கை
கார் மூலம் போகலாம் என நினைத்தால், காருக்கு பெட்ரோல் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 1000 ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை என்று என்னுடைய மகன் செல்போனில் தெரிவித்தான். சாலை மார்க்கமாக போலந்து எல்லைக்கு வர சாத்தியமில்லாத போது எப்படி மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.
மாணவர்கள் முதலில் சாலை மார்க்கமாக போலந்து மற்றும் ருமேனியா எல்லைக்கு வர இந்திய வெளியுறவுத்துறை வழிவகை செய்ய வேண்டும். அதன் பிறகு அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து வர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கராஜூம், அவருடைய மனைவி வளர்மதியும் கண்ணீர் மல்க கூறினர்.