அதிகாலையில் இரை தேடி படையெடுக்கும் கொக்குகள்

அதிராம்பட்டினம் கடற்கரைக்கு காலை நேரங்களில் இரை தேடி கொக்குகள் அதிக அளவு படையெடுத்து வருகின்றன. இந்த வகை கொக்குகள் சிறிய வகை மீன்களை உணவாக்கி கொள்கின்றன.

Update: 2022-02-28 20:56 GMT
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் கடற்கரைக்கு காலை நேரங்களில் இரை தேடி  கொக்குகள் அதிக அளவு படையெடுத்து வருகின்றன. இந்த வகை கொக்குகள் சிறிய வகை மீன்களை உணவாக்கி கொள்கின்றன. 
அதிராம்பட்டினம் கடற்பகுதி
தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினத்திலிருந்து அலையாத்தி காடுகள் தொடங்கி முத்துப்பேட்டை வழியாக தொண்டியக்காடு வரை சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளது. 
அலையாத்திகாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக சைபிரியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, இங்கிலாந்து,  என 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செங்கால் நாரை, கூழக்கிடா, கடல்ஆழா, மயில்கால் கோழி, பனங்கொட்டை சிறவி, பாம்புதாரா, நத்தகொத்திநாரை, பவளக்கால் உள்ளான், பூநாரை, சாம்பல்நாரை, நாமக்கோழி, வெள்ளைகொக்கு என பல வகையான பறவைகள் வருவது வழக்கம்.  
வெளிநாட்டு பறவைகள்
அதிராம்பட்டினம் அலையாத்திக்காடுகளையொட்டி கரையூர் தெரு காந்தி நகர், ஏரிப்புறக்கரை ஆகிய துறைமுகபகுதியில் மீனவர்கள் கடலுக்கு சென்று விட்டு திரும்பும் போது மீன்களை தரம் பிரிக்கும் பொழுது சிறிய வகை மீன்களை துறைமுக ஓரத்தில் வீசி செல்வார்கள்.  இந்த மீன்களை வெளிநாட்டு பறவைகள் உணவாக உட்கொள்ளும்.  தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வெளிநாட்டு பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தனது தாய்நாட்டுக்கு திரும்பி செல்கிறது. 
சிறிய வகை மீன்கள்
இந்தநிலையில் காலை நேரங்களில் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு சிறிய கொக்கு, பெரிய கொக்கு, நீலவால் இலை கோழி போன்றவற்றின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக பெரிய வெள்ளை கொக்குகள் அதிகளவில் அதிராம்பட்டினம் கடற்கரைக்கு வந்து செல்கின்றன. அதிகாலை நேரத்தில் பறவைகள் கடற்கரை பகுதியில் இரை தேடிவிட்டு வெயில் தொடங்கிய பிறகு கடல் ஓரத்தில் அரணாக அமைந்திருக்கும் அலையாத்தி காட்டுக்குள் சென்று தங்கி விடும். அதிகாலையில் வெள்ளை கொக்குகள் இரை தேடி கடற்கரையில் குவிந்திருக்கும் காட்சி காண்போரை பரவசப்படுத்துகிறது. 
இதைக்காணும் மீனவர்கள் உற்சாகத்துடன் பறவைகளுக்கு வலையில் சிக்கும் சிறிய மீன்களை உணவாக உட்கொள்ள கடற்கரை ஓரங்களில் கொட்டி வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்