ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி;போலீஸ்காரர்களின் காரில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற 2 பேர் கைது
பெங்களூரு அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள், போலீஸ்காரர்களின் காரில் ‘லிப்ட்’ கேட்டு செல்ல முயன்றதால் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள், போலீஸ்காரர்களின் காரில் ‘லிப்ட்’ கேட்டு செல்ல முயன்றதால் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டபள்ளாப்புரா-நந்திமலை ரோட்டில் ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பது போல நடித்து 2 மா்மநபர்கள் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்காமல், அங்கிருந்த எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிராம மக்கள் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் 2 மா்மநபர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதுபற்றி உடனடியாக தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காரில் ‘லிப்ட்’ கேட்டனர்
அப்போது சீருடை அணியாமல் இருந்த போலீஸ்காரர்கள், காரில் அங்கு விரைந்து சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் தொட்டபள்ளாப்புரா அருகே மலே கோட்டை கிராஸ் அருகே 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது போலீஸ்காரர்கள் சென்ற காரை வழிமறித்து, 2 நபர்களும் ‘லிப்ட்’ கொடுக்கும்படி கேட்டனர். உடனே போலீஸ்காரர்கள் காரை நிறுத்தினார்கள். போலீஸ்காரர்கள் சீருடை அணியாமல் இருந்ததால், மர்மநபர்களும் காரில் ஏறிக் கொண்டனர்.
காரில் இருந்தவர்களிடம் போலீஸ்காரர்கள் விசாரித்த போது, ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்றதும், அங்கிருந்து 2 பேரும் தப்பி ஓடி வந்ததையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அரிசினகுன்டே கிராமத்தை சேர்ந்த ககன் மற்றும் சச்சின் என்று தெரிந்தது. அவர்கள் 2 பேர் மீதும் தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.