கோவில்களில் நள்ளிரவு விடிய,விடிய அபிஷேக பூஜை

மகா சிவராத்திரி விழாவையொட்டி மதுரையில் உள்ள கோவில்களில் நள்ளிரவு விடிய,விடிய அபிஷேக பூஜை நடைபெற உள்ளது.

Update: 2022-02-28 18:18 GMT
மதுரை, 
மகா சிவராத்திரி விழாவையொட்டி மதுரையில் உள்ள கோவில்களில் நள்ளிரவு விடிய,விடிய அபிஷேக பூஜை நடைபெற உள்ளது.
அபிஷேகம்
சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதை யொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று இரவு முதல் கோவில் திறக்கப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நாளை 2-ந் தேதி அதிகாலை வரை நடைபெறும்.
அன்றைய தினம் சுந்தரேசுவரர் சுவாமி, மீனாட்சி அம்மன் மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், பன்னீர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள்பொடி, நெய், எண்ணெய் என அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை இன்றுமாலைக்குள் கோவிலுக்குள் உள்ள உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். பக்தர்கள் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
முதல் கால பூஜை
சிவராத்திரி விழாவையொட்டி இன்று இரவு 4 கால பூஜைகள் நடைபெறும். அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும்.
அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளிறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
சிறப்பு பூஜை
இதேபோன்று மதுரையை சுற்றியுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்கள் இரவு முழுதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் இன்மையில் நன்மை தருவார் கோவில், மீனாட்சி அம்மன் கோவிலைச் சார்ந்த பழைய சொக்கநாதர் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் என அனைத்து சிவன் கோவில்களிலும் இரவு பூஜைக்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்