நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொரப்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில பொது செயலாளர் வேணுகோபால் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் உதயகுமார், போராட்ட குழு தலைவர் ரகுபதி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி தலைவர் ஆர்.சுபாஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் நெல் சாகுபடி அமோகமாக விளைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அனைத்து வருவாய் கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு நெல் உற்பத்தி செலவு, உரம் இடுபொருட்கள் விலை உயர்ந்து உள்ளதை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதியின்படி நடப்பு பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
முடிவில் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
முன்னதாக அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஓட்டேரி பஸ் நிறுத்தத்தில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகிடங்கு வரை ஊர்வலமாக சென்றனர்.