முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ தி மு க வினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ தி மு க வினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-02-28 17:10 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க. அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், ஒன்றிய செயலாளருமான ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அழகுவேல்பாபு, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரகுரு பேசும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள். இந்த தேர்தலில் பணநாயகம் ஜனநாயகத்தை வென்றுள்ளது. அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு தி.மு.க. அரசு மிரட்டி வருகிறது. இதற்கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்றார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்ததை கண்டித்தும், தி.மு.க அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.காமராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், அய்யப்பா, ராஜேந்திரன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய நகர செயலாளர்கள், பிற அணி மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்