சிதம்பரம் நடராஜர் கோவில் முன்பு தெய்வத்தமிழ் பேரவையினர் போராட்டம்; 76 பேர் கைது குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றியதால் பரபரப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தெய்வத்தமிழ் பேரவையினர் 76 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-28 17:05 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடும் அறவழிப்போராட்டம் 28-ந் தேதி(அதாவது நேற்று) முதல் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் என்று தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் அறிவித்திருந்தார். 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பலம்(கனகசபை) கருவறை அல்ல, பூஜை செய்யப்படும் இடம் அல்ல. பக்தர்கள் சிற்றம்பல மேடையில் இருந்து நடராசரை தரிசிப்பதற்கும், தேவாரம்-திருவாசக மந்திரங்களை ஓதுவதற்கும், பாடுவதற்கும் உரிய இடம் அது. 

அண்மையில் சிதம்பரம் நகரத்தை சேர்ந்த ஜெயஷீலா என்ற லட்சுமி என்பவர் சிற்றம்பல மேடை ஏறி வழிபட சென்றபோது தீட்சிதர்கள் அவரை தடுத்து, வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். எனவே சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாட செல்வோம் என்ற கோரிக்கையுடன் அறவழியில் நடைபெற உள்ள போராட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

போலீசார் தடுத்து நிறுத்தினர் 

அதன்படி நேற்று தெய்வத் தமிழ் பேரவை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் 76 பேர் சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியின் வழியாக கோவிலுக்குள் செல்ல முயன்றனர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் கீழ சன்னதியில் தடுப்பு கட்டைகள் அமைத்து அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். 

இதனால் தெய்வத்தமிழ் பேரவையினர் கீழவீதி தேரடி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராசயோக சித்தர் பீடத்தின் வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் தேவாரம் மற்றும் நிர்வாகிகள்  திருவாசகத்தை பாடி, கண்டன கோஷமிட்டனர். போலீசார் வலியுறுத்தியும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 76 பேர் கைது 

எனவே போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 76 பேரை போலீசார் கைது செய்து, வ.உ.சி. தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தீட்சிதர்களை கைது செய்ய...

போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறுகையில், சிற்றம்பல மேடையில் ஏறி, நடராஜரை வழிபட சென்ற பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.

 விலங்குகளை கூண்டில் அடைத்து பிடிப்பதை போல் தேவாரம் பாடும் ஆன்மிக பக்தர்களை கூண்டில் அடைத்து வைக்கிறார்கள். நாங்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம், பாடிய பிறகுதான் ஓய்வோம். இந்த போராட்டம் வருகிற 5-ந் தேதி வரை நடைபெறும். 

 தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மறுஆய்வு செய்து அனுமதி வழங்கவும், சிற்றம்பல மேடையில் பாடக்கூடாது என்று கூறும் தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும். நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றார். 

மேலும் செய்திகள்