வால்பாறையில் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்

வால்பாறை அருகே குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. அவற்றை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

Update: 2022-02-28 16:54 GMT
வால்பாறை

வால்பாறை அருகே குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. அவற்றை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீரோடைகள், ஆறுகள் வறண்டுவிட்டன. 

இதனால் குடிநீர் தேடி காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. 
இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் தெற்கு பிரிவு பகுதியில் உள்ள வனப்பகுதியை விட்டு 4 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அந்த யானைகள் அங்குள்ள குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. 

விரட்டியடிப்பு

குறிப்பாக அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையின் கதவை உடைத்து எறிந்தன. பின்னர் துதிக்கையை உள்ளேவிட்டு அரிசி, பருப்பு மூட்டைகளை எடுக்க முயன்றன. 

உடனே இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். 

தீவிர கண்காணிப்பு

இதன் காரணமாக அந்த ரேஷன் கடையில் இருந்த பொருட்கள் தப்பின. தொடர்ந்து அந்த யானைகள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதால், மீண்டும் வெளியே வர வாய்ப்பு உள்ளது. 

எனவே அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மேலும் செய்திகள்