குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
காளையார்கோவிலில் குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காளையார்கோவில்,
காளையார்கோவில் நகர் முழுவதிலும் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் காளையார்கோவில் நகரில் அமைந்துள்ள ஒலுகுளம் கண்மாய் பகுதியில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தது. அந்தக் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம் மற்றும் துர்நாற்றத்தால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருந்து வருவதாகவும் நீர்நிலை மாசுபடுவதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் நேற்று காலை குப்பைகளை அள்ளி கொண்டு வந்த குப்பை வண்டிகளை அப்பகுதி பொதுமக்கள், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவா மற்றும் வார்டு உறுப்பினர்கள், நீரின்றி அமையாது உலகு தன்னார்வலர்கள் ஆகியோர் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் இதுரு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் காளையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் 10 நாட்களுக்குள் மாற்று இடம் ஒதுக்கி குப்பைகளை கொட்டுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.