இரைதேடி வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை
நஞ்சன்கூடு அருகே இரைதேடி வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது. அந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு:
வீட்டிற்குள் புகுந்து சிறுத்தை
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் எடஹள்ளி எனும் கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இரைதேடி கிராமத்திற்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து இரைதேடி சிறுத்தை ஒன்று எடஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்துள்ளது.
பின்னர் சிறுத்தை, அதேகிராமத்தை சேர்ந்த சென்னப்பாவின் என்பவரின் வீட்டிற்குள் திடீரென புகுந்தது. அப்போது வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்த சென்னப்பா, அவரது குடும்பத்தினர் சிறுத்தையை புகுந்ததை கண்டதும் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து கதவை வெளிப்புறமாக தாழிட்டு கொண்டனர். இதற்கிடையே பயந்துபோன சிறுத்தை, டி.வி. வைக்கும் ஸ்டாண்டுக்கு பின்னால் பதுங்கி இருந்தது. பின்னர் வீட்டில் அங்கும், இங்குமாக சிறுத்தை சுற்றிதிரிந்தது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள், சென்னப்பாவின் வீட்டு முன் வந்து ஜன்னல் வழியாக சிறுத்தையை பார்த்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வீட்டு ஜன்னல் வழியாக சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
இதனால் சிறிது நேரத்தில் சிறுத்தை மயங்கி கீழே விழுந்தது. இதையடுத்து வனத்துறையினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று வலை விரித்து சிறுத்தையை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட சிறுத்தையை, கூண்டில் அடைத்து ஜீப்பில் எடுத்து சென்று அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.
பரபரப்பு
இதனால் சென்னப்பா-குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். வனப்பகுதியில் இருந்து இரைதேடி வந்த சிறுத்தை, வீட்டிற்குள் புகுந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.