காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது

கொரோனா வைரஸ் பரவலால் பாதியில் நிறுத்தப்பட்ட காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை ராமநகரில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-02-27 21:21 GMT
பெங்களூரு:

பாதயாத்திரை

  காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது எனுமிடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணையை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த திட்ட விஷயத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.

  இந்த நிலையில் மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை கடந்த ஜனவாி மாதம் 9-ந் தேதி சங்கமத்தில் தொடங்கியது. 4 நாட்கள் 139 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பாதயாத்திரை ராமநகருக்கு வந்தது. அப்போது கொரோனா 3-வது அலை தீவிரமாக பரவியது. இதையடுத்து அரசியல், சமூக, ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது.

கட்டுப்பாடுகள் தளர்வு

  இதையடுத்து காங்கிரசின் பாதயாத்திரை ராமநகரில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது இதுபற்றி கருத்து தெரிவித்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கொரோனா பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் இந்த பாதயாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் கொரோனா 3-வது அலை குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

  இதையடுத்து 27-ந் தேதி காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று அக்கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்தார். அதன்படி காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை தொடக்க விழா ராமநகரில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கலந்து கொண்டு முரசு கொட்டி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

பெற முடியவில்லை

  இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் ஆகியோர் உள்பட கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசியதாவது:-

  கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2½ ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதலை பெறுவதில் பா.ஜனதா அரசு தோல்வி அடைந்துவிட்டது. மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சியில் இருந்தும் கூட இந்த அனுமதியை பெற இங்குள்ள பா.ஜனதா அரசால் முடியவில்லை.

காங்கிரஸ் வெற்றி பெறும்

  தமிழகம் அரசியல் நோக்கத்துடன் இந்த திட்டத்தை எதிர்க்கிறது. இதை எதிர்க்க அந்த மாநிலத்திடம் எந்த கோர்ட்டின் உத்தரவும் இல்லை. இந்த திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் அது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா மேகதாது திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக காங்கிரஸ் குறித்து பொய்யான தகவல்களை பா.ஜனதா பரப்புகிறது.

  முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மேகதாது திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. மாநிலத்தின் நீர் உரிமையை பெறுவதில் பா.ஜனதா அரசு தடங்கலாக உள்ளது. இந்த பாதயாத்திரை மூலம் நீர் உாிமையை பெறுவதில் மாநில மக்கள் முன்வைக்கும் கோரிக்கை மேலும் வலுப்பெறும். கர்நாடகத்தின் நீர் உரிமையை பெறுவதற்கான இந்த முயற்சியில் இறங்கியுள்ள மாநில காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.
  இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசினார்.

  முதல் நாளில் 16 கிலோ மீட்டா் தூரம் அதாவது பிடதி வரை பாதயாத்திரை நடைபெற்றது. நேற்று இரவு காங்கிரஸ் தலைவர்கள் பிடதியில் தங்கினர். இன்று (திங்கட்கிழமை) காலை பிடதியில் இருந்து 2-வது நாள் பாதயாத்திரை தொடங்குகிறது. வருகிற 3-ந் தேதி பெங்களூருவில் இந்த பாதயாத்திரை நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்