ராதாபுரத்தில் என்ஜினீயரிடம் ரூ.1.85 லட்சம் மோசடி
ராதாபுரத்தில் என்ஜீனியரிடம் நூதன முறையில் ரூ.1.85 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
நெல்லை:
ராதாபுரத்தில் என்ஜீனியரிடம் நூதன முறையில் ரூ.1.85 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சாப்ட்வேர் என்ஜீனியர்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் விஜயாபதி ரோட்டை சேர்ந்தவர் காளியப்பன் மகன் கஜராஜன் (வயது 24). இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். தற்போது அவர் ராதாபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜராஜனின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. உடனே அவர் அதில் இருந்த `லிங்கை' கிளிக் செய்து பார்த்தார்.
அப்போது அவரது எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசிய மர்ம நபர், தாங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், என்று கூறி உள்ளார்.
ரூ.1.85 லட்சம் மோசடி
இதனை உண்மை என்று நம்பிய கஜராஜன் பல தவணைகளாக அந்த மர்ம நபரின் வங்கிக்கணக்கு மற்றும் `கூகுள் பே' மூலம் மொத்தம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 695 செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர் அவருக்கு எந்த லாபமும் ஈட்டி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதன்பின்னர் அந்த நபரின் எண்ணுக்கு அழைத்தபோது செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அப்போதுதான் கஜராஜனுக்கு தான் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.
உடனே அவர் இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.