போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

தஞ்சை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-02-27 19:29 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து முகாம்

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரத்து 449 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் 6 ஆயிரத்து 40 பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆர்.கே. ஆஸ்பத்திரி

தஞ்சை வ.உ.சி.நகரில் உள்ள ஆர்.கே. ஆஸ்பத்திரியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட போலியோ ஒழிப்புக்குழு தலைவர் டாக்டர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகம், ரோட்டரி முன்னாள் ஆளுனர்கள் குணசேகரன், மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் சரஸ்வதி வரவேற்றார்.
இதில் இந்திய மருத்துவக்கழக தலைவர் டாக்டர் பாரதி, உறுப்பினர் டாக்டர் சரவணவேல், டாக்டர் மனோஜ் மதுசூதனன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க தஞ்சை தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்