உக்ரைனில் சிக்கித்தவிக்கும் ஆற்காடு மாணவரை மீட்டுவர முதல்-அமைச்சருக்கு தந்தை கோரிக்கை

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் ஆற்காடு மாணவரை மீட்டுவர முதல்-அமைச்சருக்கு தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-02-27 18:12 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். ஆற்காட்டில் போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். இவரது மகன் அருணாச்சலம் (வயது 20) உக்ரைன் நாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மருத்துவ படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு சிக்கி தவிக்கும் மாணவர் அருணாச்சலம்  தனது பெற்றோருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தற்போது நடக்கும் அசாதாரண சூழ்நிலையால் என்னுடன் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்குள்ள பாதாள அறையில் தஞ்சம் அடைந்துள்ளோம்.

 இப்பகுதியில் தொடர்ந்து குண்டு வெடிக்கும் சத்தம் அதிகமாக கேட்கிறது. இதனால் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளோம். ஆதலால் உயிருக்குப் போராடி வரும் எங்களை உடனடியாக மீட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அருணாச்சலத்தின் தந்தை ஆனந்தன் கூறுகையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் மகனின் ஆசையை நிறைவேற்ற கடன் பெற்று படிப்புக்காக வெளிநாடு அனுப்பினோம். அங்கு போர் நடப்பதால் அசாதாரண சூழ்நிலை உள்ளது. எனவே எனது மகன் மற்றும் அவனுடன் படிக்கும் மாணவர்களை மீட்டுவர தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்